படித்ததில் பிடித்தது - பழைய மெட்ராஸ் !

உங்களுக்கு நெடும் பயணங்களும் அதன் மர்மங்களும் பிடிக்கும் என்றால், உங்களுக்கு வரலாறும் அதன் அரசியலும் விருப்பம் என்றால், நீங்கள் முன்னொரு காலத்தில் பிறந்திருந்தால் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் எனத்தெரிந்து கொள்வதில் ஆசை இருந்தால், குதிரைகளிலும் கப்பல்களிலும் பயணம் செய்வதைப் பற்றிய கனவுகள் உங்களுக்கு இருப்பதாய் இருந்தால், பண்டைய காலத்து வெளிச்சத்தையும் வெளியையும் நிறங்களையும் பொருட்களையும் குறித்த அறிவு உங்களுக்கு வேண்டும் என நீங்கள் நினைப்பதாய் இருந்தால் அவசியம் நீங்கள் படிக்க வேண்டியப் புத்தகம்.


புத்தகத்தின் பெயர் : இந்தியப் பயணக் கடிதங்கள்

- எலிஸா ஃபே , தமிழில் : அக்களூர் இரவி
சந்தியா பதிப்பகம்
புதிய எண் 77, 53ஆவது தெரு, 9ஆவது அவென்யூ, அசோக் நகர், சென்னை-600 083.
தொலைபேசி : 044-24896979

புத்தகத்தின் பின் அட்டையிலிருந்து:
இந்தியாவுக்கு வந்து சேர்ந்துவிட்டால் ஒரு மகாராணியைப் போல வாழலாம் என்று இங்கு வந்திறங்கிய ஆங்கிலேயப் பெண்களில் எலிஸா ஃபே ஒருவர். கள்ளிக்கோட்டையில் வந்தவுடனேயே சிறைபிடிக்கப்பட்ட எலிஸா ஃபே, சந்தித்த கொடூரமான மனிதர்கள், வழிப்பறிக்கொள்ளையர்கள், சாகசங்கள் என விரிகிறது எலிஸாவின் பயண அனுபவங்கள். கள்ளிக்கோட்டையிலிருந்து விடுதலையாகி கொச்சி, சென்னை நகரங்களில் தங்கியிருந்துவிட்டு இறுதியாக கல்கத்தாவுக்குச் சென்று தன் கணவருடனான மண உறவை விலக்கிக் கொண்டு இங்கிலாந்து திரும்புகிறார் எலிஸா.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக பாய்மரக் கப்பலில் இங்கிலாந்திலிருந்து தனது கணவருடன் எலிஸா மேற்கொண்ட ஒரு வருடத்திற்கும் மேலான சாகசமிக்க கடற்பயண அனுபவக் குறிப்புகளின் தொகுப்பு இந்நூல்.
சென்னையைப் பற்றி புத்தகத்திலிருந்து சில கடிதம்
மெட்ராஸ்
ஏப்ரல், 13, 1780.

பல்வகை இடர்கள், துன்பங்களுக்குப் பின், களிப்பூட்டும், நல்ஓய்வு அளிக்கும் இடமாக இந்நகர் அமைந்திருக்கிறது. ஆங்கிலேயப் பெண்மணிகள் சிலருடன் பழகும் வாய்ப்பு இங்கு கிடைத்தது. அவர்களது அன்பான உபசரிப்புகள் எனக்கு ஆறுதல் அளித்தன. என் மனவேதனைகள் தணிவதற்கு உதவின. நீண்ட நாட்களாக நான் ஏக்கத்துடன் எதிர்பார்த்த சூழல் இது. இதன் காரணமாக என் உடல்நிலை பெருமளவு சீரடைந்துள்ளது.
இந்நகரின் தனித்தன்மையான தோற்றம் கவனத்தை ஈர்க்கிறது. வசீகரிக்கும் அழகுடன் இந்நகர் மிளிர்கிறது. வீடுகளும் பொதுக் கட்டிடங்களும் பெரிதாகவும் நேர்த்தியாகவும் காணப்படுகின்றன. ஒருவகை கிளிஞ்சலால் தயாரிக்கப்பட்ட கலவையால் வெளிப்புறம் பூசப்பட்டு, பளிங்கின் மெருகுடன் மின்னுகின்றன. அற்புதமான கலையுணர்வுடன் இக்கட்டிடங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இத்தாலியில் இருக்கும் உணர்வை அளித்தன. சுண்ணம் என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படும் இப்பொருள் வங்காளத்திற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆயினும், அந்த இடத்தின் ஈரப்பதம் மிக்க வானிலையால் இயற்கைத் தன்மையை இழந்துவிடுகிறதாம். இந்த நகருக்கு வருகிறவர்கள் கண்டு ரசிக்கும் எழிலான மெருகுத்தன்மை அங்கு கிடைப்பதில்லை என்கிறார்கள்.
விரும்பும் மதத்தை இங்கு நாம் பின்பற்றலாம். வழிபாட்டு இடங்களை பல்வேறு மதத்தவர்களும் போட்டி போட்டுக்கொண்டு அழகு செய்கின்றனர். பொதுவாக பல்வேறு வடிவங்களில் சிறந்த முறையில் அவை கட்டப்பட்டுள்ளன. புதுமையான அவ்வடிவங்கள் நமக்கு மனநிறைவைத் தருகின்றன. குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில், ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து நிற்கும் உயர்ந்த அழகிய மரக்கூட்டங்களுக்கு இடையில் இத்தலங்கள் அமைந்துள்ளன. வெண்மை ஒளிவீசும் சுண்ண மெருகுடன், நயமும் நேர்த்தியும் இணக்கத்துடன் வெளிப்பட, உயர்ந்தெழுந்த கோபுரங்களைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி உண்டாகிறது. கற்பனை வளம் மிக்க கதைகளை அல்லது ‘அராபிய இரவுகளின்’ சாகசக் கதைகளை படித்தபின் நம் மனதில் உலவும் உருவங்களுடன் ஒத்துப்போகின்றன. உண்மையில், துரதிருஷ்டமான முறையில் ஏமாற்றப்படும் முன்னர், கெய்ரோ மாநகர் எப்படி இருக்கக்கூடும் என்று நான் கற்பனை செய்திருந்தேனோ அவ்வாறு மெட்ராஸ் இருந்தது.
பல்வேறு இனத்தவர்களும் கலந்து வாழும் இந்நகரைக் காணும்போது இந்த சிந்தனை மேலும் உயர்கிறது. தடையின்றி வழிந்தோடும் ஆடை அணிகலன்களின் விற்பனை. பகட்டையும் ஒய்யாரத்தையும் வெளிப்படுத்தும் பல்லக்குகள். அழகான கோச்சு வண்டிகள். எண்ணிக்கையற்ற வேலையாட்கள். பகட்டு நிறைந்த இலகுவான சொகுசான வாழ்க்கை. அளப்பற்ற செல்வவளம். இப்படி ஐரோப்பிய சுவையுணர்வுடன் இணைந்து வெளிப்படும் ஆசியாவின் உயர்வை அனைத்து திசைகளிலும் பார்க்க முடியும். மின்னும் நிலப்பரப்பு ஒருபுறம், துயரம் நிறைந்த கூக்குரல் மறுபுறம் என்று வாழ்க்கையின் பல்வேறு நிலைகளையும் இந்நகர் வண்ணம் தீட்டிக்காட்டுகிறது. எல்லா இடங்களைப் போலவே, இயல்பிலேயே தவறுகளும் மடத்தனங்களும் நிறைந்ததாகவே மனித இனம் இருக்கிறது என்பதை இங்கு உணர்ந்தேன். வெள்ளை இனத்தின் ஏமாற்றுப் பேர்வழிகள் போன்றே கறுப்பினத்தவர்களிலும் காணபடுகிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை ஆணவம் மிக்கவர்கள்.
கரையில் இறங்கியதும் துபாஷிகள் நம்மை மொய்த்துக் கொள்கிறார்கள். அதேபோல் அனைத்து விதமான வேலைக்காரர்களும் வேலை கேட்டு கெஞ்சுவார்கள். ஏற்கனவே நம் அடிமைகளாக மாறிவிட்டதைப் போல அவர்கள் நடந்துகொள்வார்கள். ஆனால், வாய்ப்புக் கிடைத்தால் ஏமாற்றி விடுவார்கள். இந்த துபாஷிகள் நமது தேவைகளையும் வேலைகளையும் கவனித்துக் கொள்ளும் ‘ஸ்டூவர்ட்’ போன்றவர்கள். இவர்கள் இல்லாமல் இங்கு வாழ்க்கை நடத்துவது கடினம். ஏமாற்றுக்காரர்கள் நிறைந்த இப்பிரதேசத்தில் மற்றவர்கள் யாரும் உன்னை ஏமாற்றாமல் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்; ஆனால் அவன் மட்டும் உன்னை ஏமாற்றுவான்.
அத்தகைய ஒருவனைக் கண்டுபிடித்து வேலைக்கு அமர்த்திக்கொள்வது உன் அதிருஷ்டம். ஆனால், இவர்கள் தங்களது தந்திரங்களால் மற்றவர்களை எரிச்சலூட்டாமல் இருக்கலாமே என்று விரும்புகிறேன். ஏனென்றால், இந்த இந்துக்களின் மெல்லிய முகபாவங்களில் மென்மையான நடவடிக்கைகளில், ஆர்வத்தை மிகவும் தூண்டும் ஏதோ ஒன்று இருப்பதாக எண்ணுகிறேன்.
திரு.போஃபம் என்ற நண்பரின் இல்லத்தில் இப்போது நாங்கள் இருக்கிறோம். அவர்கள் நல்ல முறையில் எங்களை வரவேற்று உபசரித்தனர். அவர் என் கனவரின் சகதேசத்தவர். அவரும் ஒரு வழக்குரைஞர். அவரது மனைவி மிகவும் சுறுசுறுப்பானவள். எகிப்திம் பெய்கள், அய்ரோஸ், அவனது கூட்டாளிகள், சுத்தர்கான், கப்பலில் என்னுடன் பயணித்தவர்கள் என்று அனைவராலும் கொடூரமாக சாகடிக்கப்பட்ட என் உனர்வுகள், அவளது உற்சாக உணர்வுகளால் மீட்கப்பட்டன.
மெட்ராஸ் நகரைச் சுற்றியிருக்கும் சில இடங்களுக்கு நாங்கள் சுற்றுலா சென்று வந்தோம். அனைத்து இடங்களுமே உற்சாகம் தருவதாகவே இருந்தன. நகரில் நான் சென்ற பகுதியிலும், நகரின் புறப்பகுதியிலும் பல பெரிய மனிதர்களின் வீடுகள் அமைந்திருந்தன. நயமிக்க கட்டடக்கலை உணர்வுடன், பகட்டுடன் அவை காணப்பட்டன. சுண்ணக் கலவையால் அழகுற மெருகேற்றப்பட்டிருந்தன. வீடுகள் மரங்களால் சூழப்பட்டிருக்கின்றன. மரச்சோலையால் சூழப்பட்ட இத்தகைய குடியிருப்பு ஒன்றைப் பார்த்தேன். கடலும், அந்நீலக்கடலில் நிற்கும் கப்பல்களின் பின்னணியுடன் மெட்ராஸின் தூரத்துத் தோற்றம், மிகச்சிறப்புடன் இதுவரை பார்த்திராத, வசீகரமான கற்பனை ஓவியமாக காணப்பட்டது.

மெட்ராஸில் கடலலைகள் தவிர்த்து வேறொன்றும் அவ்வளவு பயங்கரமானது இல்லை. இவ்வலைகள் அபாயமானவை. ஆபத்தை விளைவிக்கும் இவற்றிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள இரண்டு வகை படகுகளை கடலோடிகள் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், இந்த பாதுகாப்பையும் மீறி பல உயிர்கள் மடிந்திருக்கின்றன. மசுல்லா என்ற ஒருவகைப் படகு நீளமானது. நார்க்கயிற்றால் பிணைக்கப்பட்டுள்ளன. அலையின் கட்டுமீறிய வேகத்தை எதிர்த்து முன்னேறும் வகையில் இப்படகு அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு பாதுகாப்பாக மற்றொன்று. கட்டுமரம் என்று அதனை அழைக்கிறார்கள். பெரிய அளவு மூங்கில்களை ஒன்று சேர்த்து கட்டப்படும் இதில் ஒருவர் மட்டும் துடுப்பு போடுவார். ஒரு மசுல்லாவுடன் இரண்டு அல்லது மூன்று கட்டுமரங்கள் இணைந்து இயக்கப்படுகின்றன. ஒருவேளை படகு கவிழ்ந்தால் பயணிகள் கடலில் மூழ்காமல் காப்பாற்ற இவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆபத்துகளை திறமையுடன் இவர்கள் சமாளிப்பது நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால், எவ்வித சாமர்த்தியமும் இந்த ஆபத்தை முற்றிலும் நீக்கிவிடும் என்று கூற முடியாது. கடற்கரை எழில் மிகுந்து காணப்படுகிறது.
இந்நகரில் பெண்கள் மிகவும் நாகரீகமான தோற்றத்துடன் காணப்படுகிறார்கள். இங்கிலாந்தை விட்டு புறப்பட்டபின் உடைகள் விஷயத்தில் பலவிதப் புதுமைகளை வழிநெடுகிலும் கண்டேன்.புதுமையான நாகரீக பாணிகள் இவ்வளவு வேகமாக பயணப் செய்வதைப் பார்த்து நான் பெரிதும் வியப்படைகிறேன். மெட்ராஸில் உள்ள இடங்களை ஒவ்வொரு நாள் மாலையும் கோச்சு வண்டியில் சுற்றிப் பார்ப்பதும் அப்படியே காற்று வாங்க செல்வதும் இங்கு வழக்கம். சிற்றுலா செல்வதற்கும் பொதுவாக இந்த கோச்சு வண்டிகள்தான் பயன்படுகின்றன. நகரத்திற்குள், நான்கு பேர் சுமந்து செல்லும் பல்லக்கை பெண்கள் பயன்படுத்துகின்றனர். எனக்கும் அதுதான் பிடிக்கிறது. இவை பெரும்பாலும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டு, இந்நாட்டின் குணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளன. நான் எப்போதும் பெண்களிடம் காணப்படும் சிறந்த குணங்களை வியந்து பாராட்டும் வழக்கம் கொண்டவள். ஆனால், பல்லக்கில் பயணிப்பவர்களின் பேச்சு, முற்றிலும் மாறுபட்டதாக உற்சாகமற்றதாக இருந்தது.
நான் இதுவரை சந்தித்தவர்களில் போஃபம் விசித்திரமானவர். பாவம், அந்த மனிதர், ஏதாவது ஒரு திட்டத்தில் தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்கிறார். அவரது இனத்தின் பெரு முயற்சியால் இந்த சமூகம் தொடர்ந்து பலன் பெற்று வருகிறது. ஆனால், அவருக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ போதுமான பலன் கிடைக்கும் அளவிற்கு இத்திட்டங்கள் வெற்றி பெருவதில்லை. இப்போது அவர் கறுப்பர் நகரமொன்றை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறார். தனக்கு நல்ல எதிர்காலம் இதன்மூலம் அமையக்கூடும் என்ற எதிர்பார்க்கிறார். ஆனால், மற்றவர்கள் இத்திட்டத்தில் பிரச்சனைகள் அதிகம் என்கிறார்கள். பெரும் அழிவை இவர் சந்திக்க நேரும் என்றும் அனுமானிக்கிறார்கள். ஆனால், தொலைநோக்குப் பார்வையுடன் இவர் எடுத்து செய்யும் திட்டங்களால் இவருக்குக் கிடைக்கும் மனமகிழ்ச்சியை திருப்தியை, திட்டத்தினால் கிடைக்கும் பலனோடு மட்டும் ஒப்பிட்டு பார்த்து புறக்கணிக்க முடியாது. உண்மையில், மனமகிழ்விற்கு இது ஒரு அசாதாரணமான வழி.
முற்றிலும் இந்தியர்கள் வாழ்ந்த மெட்ராஸின் ஒரு பகுதி கறுப்பர் நகரமென்று முன்னாளில் அழைக்கப்பட்டது. ஆனால், இப்போது ஐரோப்பியர்கள் பலரும் அங்கு குடியேறத் தொடங்கியுள்ளனர். செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைவிட இங்கு வாடகை குறைவு. வலிமையான அரண்கள் கொண்டதாக செயிண்ட் ஜார்ஜ் கோட்டை விளங்குகிறது. கோட்டைக்குள் அழகிய பல இல்லங்கள் அமைந்துள்ளன. நவநாகரீகத்துடன் சொகுசாக வாழ்வதற்கு ஏற்ற இடம். கறுப்பர் நகர பகுதிக்கும் கோட்டைக்கும் இடைப்பட்ட பகுதி, சத்திர மைதானம், ஒரு வெண்மணற்பரப்பு. கண்களைக் கூசச்செய்யும் மணல் வெளியின் தாங்க முடியாத வெப்பம், இங்கு வசிப்பவர்களுக்கு, குறிப்பாக அந்நியர்களுக்கு, மிகவும் இடையூறாக இருக்கிறது.
என் கணவரை இந்நகரிலேயே இருக்குமாறு பலரும் அவரை அதிகமாக வற்புறுத்துகின்றனர். குடியிருக்க பல நல்ல இடங்களும் எங்களது ஆசையைத் தூண்டும் வகையில் எங்களிடம் முன்மொழியப்பட்டன. ஆனால், அவரது எண்ணமெல்லாம் கல்கத்தாவில். அறிவிற்கும் திறமைக்கும் அங்குதான் போதுமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. ஆகவே அவரை மெட்ராஸில் இருத்த அவர்களால் இயலவில்லை. அதுமட்டுமன்றி, மெட்ராஸில் உச்ச நீதிமன்றம் இல்லை என்பதும் முக்கிய தடை. இங்கு ஒரு சட்ட வல்லுநராக மட்டுமே அவரால் தொழில் செய்ய முடியும். மேயர்ஸ் கோர்ட்டில் வழக்குரைஞர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே பாரிஸ்டர் என்ற தகுதிக்கு ஏற்ற பணி இங்கு இல்லை. அவரது இந்த முடிவிற்கு நான் மிகவும் இணக்கமுடன் இசைந்தேன்.
எழுதுவதை தற்காலிகமாக நான் நிறுத்துகிறேன். செயிண்ட் தாமஸ் மலைக்கு அழைத்துச் செல்ல போஃபம் காத்திருக்கிறார்.
ஏப்ரல் 17, 1780.
எனது அன்பிற்குரிய நண்பர்களுக்கு இந்நாளை ஒதுக்கிவிட்டேன். மெட்ராஸில் தங்கப் போகும் இறுதி நாள் இதுவாக இருக்கும். செயிண்ட் தாமஸ் மலை கூம்பு வடிவில் அமைந்த அழகிய உயரமான குன்று. குன்றின்மேல் வெண்மை நிற வீடுகள். செயிண்ட் தாமஸ் நினைவாக போர்ச்சுக்கீசியரால் கட்டப்பட்ட சர்ச் ஒன்றும் இருக்கிறது. செயிண்ட் தாமஸ் ஒரு பிராமணரால் இங்கு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இடத்திற்கு செல்லும் சாலை மிக அழகாக இருக்கிறது. இரு புறமும் அமைந்திருக்கும் சிறந்த மரங்கள், சாலையில் சூரிய ஒளியே இறங்காத அளவிற்கு அடர்த்தியாக அமைந்து அழகிற்கு அழகு சேர்க்கின்றன.
இங்கிருந்து அருகாமை தூரத்தில் பெரிதாக வளர்ந்த ஆலமரம் ஒன்றை எனக்குக் காட்டினார்கள். அதன் கிளைகள் தரையைத் தொடும் அளவிற்குத் தாழ்ந்திருந்தன. விழுதுகள் வேர்களாக நிலத்தில் ஊடுருவி புதிதாக முளைத்தவையாய்க் காணப்பட்டன. எண்ணற்ற வலைவுகள் கொண்ட மரக்கிளைகளுடன் தனித்ததொரு படைப்பாக, தாவரங்களின் தொகுப்பால் உருவான ‘தேவாலயமாக’ எனக்குத் தோன்றியது. முற்காலத்தில் உருவ வழிபாட்டாளர்களுக்கு உகந்த இடமாக ஆலமரங்கள் தான் இருந்தன. தீட்சைப் பெறாதவர்களுக்கு இவ்வழிபாடுகளில் அனுமதி இல்லை. இறைத் தொடர்பான விசித்திரமான சடங்குகள் நடத்துவதற்கு மிகச்சரியான இடங்களென திட்டமிட்டு இவ்விடங்கள் தெரிந்தெடுக்கப்பட்டன. இவற்றை ‘கைகளால் கட்டப் பெறாத ஆலயங்கள்’ என்று மிகச்சரியாக அழைக்கலாம். மெட்ராஸிலிருந்து ஏழு மைல் தொலைவில் இருக்கும் இந்த இடத்திற்கு உல்லாச பயணம் மேற்கொண்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
இந்தியாவிற்கு சென்று வந்தவர்கள் கூறும் நடனமாடும் பாம்புகளை, கத்திகளை விழுங்கும் மந்திர வித்தைக்காரர்களை என் கண்களால் கண்டேன். பாம்புகள் எனக்கு ஓரளவு அச்சத்தைத் தந்தன. மற்றது சற்று அருவருப்பைத் தந்தது எனலாம். ஒருவேளை பழக்கப்பட்ட பின்னர் களிப்பூட்டுவதாக இருக்கலாம். பல்வேறு வகைப் பாம்புகளை விதவிதமான வண்ணங்களில், நளினமான, அச்சம் தரும் அசைவுகளில் பார்த்தபோது திகில் நிறைந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. வேறு சில வேடிக்கைகளையும் கண்டேன். தன் தொண்டைக்குள் கத்தி ஒன்றை முழுவதுமாக நுழைத்துக்கொண்ட மனிதனைப் பார்த்தேன். கண்ணிற்கு முன் நடக்கும் அச்செயலில் ஏமாற்று வேலை ஏதும் இல்லை என்றறியும்போது, நீங்கள் வியப்பின் எல்லைக்குச் செல்கிறீர்கள். அந்தச் செயல் இயற்கைக்கு மாறானது. அருவருப்பைத் தருவது என்று உணரும்போது உங்கள் உவகை மறைந்து விடுகிறது. வித்தைக்காரனின் வேறு சில தந்திரங்களையும் பார்த்து மகிழ்ந்தேன்.
நான்கு பித்தளைப் பந்துகளைத் தன் தலைக்கு மேல் தூக்கிப்போட்டு, கீழே விழாமல் அவற்றைப் பிடித்தான். அவனது வேகமும், சமநிலை செய்துகொண்ட திறனும் வியப்பைத் தந்தன. அவனது தலையைச் சுற்றி அந்த பந்துகள் தொடர்ந்து வேகமாக சுற்றியபோது, அவன் தலைக்கு மேல் தொப்பி ஒன்றைக் கவிழ்த்தது போல் இருந்தது. தன் நாவினால், சிறு மணிகளை நூலில் கோர்த்தான். தன் கைகளை ஊன்றி பல்வகை ஆர்வமூட்டும் வித்தைகளை செய்து காட்டினான்.
எப்போதும் எங்கும் காணமுடிகிற பொழுதுபோக்காக இங்கும் நடனமாடும் பெண்கள். ஆனால், எனக்கு ஏமாற்றமே. மஸ்லீன் துணிகள் பலவற்றை ஒன்றன்மேல் ஒன்றாக இவர்கள் பாவாடைபோல் அணிந்துகொள்கிறார்கள். சுழன்றாடும்போது இவை துணிவளையங்களாக தெரிகின்றன. ஆனால், இவர்களின் அசைவுகள் மிகவும் மெதுவாக இருப்பதோடு, ஒரே மாதிரியாக, எவ்வித மாற்றமுமின்றி இருந்தன. கெய்ரோ மாநகரின் தெருக்களில் பார்த்த நடனங்களைவிட இவை தரத்தில் குறைந்தவை. ஆனால், நிச்சயமாக குறைவான ஆபாசம் கொண்டவை.
பொதுவாக இங்கு வாழும் மனிதர்களின் குணத்தில் உறுதித்தன்மை என்பது இல்லை. மனத்திடமற்றவர்களாக தோன்றுகிறனர். ஆனால், கடலில் பாடுபார்ப்பவர்கள் இதற்கு விதி விலக்கு. அவர்களது இயக்கமும் முயற்சிகளும் நினைத்துப் பார்க்கமுடியாதவை. ஏதாவது அன்பளிப்போ, பணமோ கிடைக்குமென்றால், பேராவலுடன் துணிவுமிக்க சாகசக்காரர்களாக ஆபத்துகளைச் சந்திக்க துணிந்து விடுகிறார்கள். கடலில் நிற்கும் கப்பலுக்கு கடிதமேதேனும் கொடுத்தனுப்ப வேண்டுமென்றால், எவ்வளவு உயரத்திற்கு அலையெழுந்தாலும், அதனை மீறி கடிதத்தை எடுத்து செல்ல யாரேனும் ஒருவன் தயாராக இருப்பான். நீரில் நினையாமல் பாதுகாப்புடன் அதனை கொண்டு சேர்ப்பான். இதற்கென தங்கள் தலைப்பாகைக்கு மேல் மெழுகு தடவிய துணி ஒன்றைச் சுற்றியிருப்பார்கள். கட்டுமரங்களிலிருந்து தவறி விழுந்தாலும் மீண்டும் அதன்மேல் ஏறி பயணிக்கக் கூடியவர்கள். துடிப்பு மிக்க ஐரோப்பியர்கள் போன்றே இயங்கும் இவர்கள், கிடைக்கும் பலனிற்காகவே இப்படிச் செய்கிறார்கள்.
ஹிந்துக்கள் பொதுவாக தங்கள் தலைகளை மழித்திருப்பார்கள். ஆனால் சிறிதளவு முடிக்கற்றையை மிகக்கவனத்துடன் தலையின் பின்பக்கத்தில் விட்டுவைத்திருப்பார்கள். அவர்கள் எழுதும் முறை ஆர்வத்தை தூண்டுகிறது. இரும்பால் செய்யப்பட்ட எழுதுகோலால் பனை ஓலைகளில் எழுதுகிறார்கள். பின்னர் அவற்றை ஒன்று சேர்த்து சுவடியாகக் கட்டி வைக்கிறார்கள். சிறுவர்களுக்கு எழுதக் கற்றுக் கொடுப்பதற்கு மணல் பயன்படுத்தப்படுகிறது. எழுது பொருட்களின் செலவு இல்லை. எண்களும் இந்த முறையிலேயே கற்றுத் தரப்படுகின்றன. கணக்கு கற்பிப்பதற்கு அதிக அளவில் கூழாங்கற்கள் பயன்படுகின்றன. கற்பிக்கப் பயன்படும் பொருட்கள் அனைத்தும் எளிமையானவை; மலிவானவை.
இப்பகுதி மக்கள், கள் என்ற போதைப் பொருளுக்கு அதிக அளவில் அடிமைப்பட்டிருக்கிறார்கள். தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து வடிக்கப்படும் புளிக்க வைக்கப்படாத சாறு தான் கள். பானகமும் இங்கு அதிகமாக அருந்தப்படுகிறது. வெண்ணை இங்கு அரிதான பொருள். கிடைப்பதும் நன்றாக இருப்பது இல்லை. இவர்கள் பயன்படுத்தும் நெய் வெண்ணையை உருக்கி தயாரிக்கப்படுகிறது. நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்குமாம். சமையலுக்கும், பொரிப்பதற்கும் பெரிதும் பயன்படுவது. மொத்தத்தில் மெட்ராஸில் ஒருவர் சொகுசாக வாழமுடியும். ஆனால், இந்நகர் செல்வந்தர்களுக்கு உகந்த இடமாக எனக்குத் தென்படுகிறது. பொருட்களின் விலையை நான் எப்படி அணுகுவேன் என்பதுதான் உனக்குத் தெரியுமே.
ஹைதர் அலி என்ற புலியின் நகங்களில் இருந்து நாங்கள் தப்பித்து வந்தோம் என்பது மிக நல்ல விசயம். எங்களை உள்நாட்டிற்கு அனுப்புவது என்ற அச்சம் தரும் முடிவு வெற்றுப்பேச்சல்ல என்று நாங்கள் கருதினோம். அந்த நேரத்தில் நம் நாட்டவர் பலர் இவ்வாறு அனுப்பப்பட்டு துயருற்றதாக அறிந்தோம். அது உண்மையெனில் வேதனைப் படும் இம்மனிதர்கள் விடுதலை பெறும்வரை, பிறரைக் கொடுமைப்படுத்தும் இந்த கொடுங்கோலன் அடக்கப்படும்வரை அவனால் தூண்டப்படும் இந்த சண்டை தொடர்ந்து நடக்கட்டும்.
நாளை அதிகாலையில் புறப்படுவதற்கு தயாராக இருக்கும்படி ஓ’டொனெல் என்னிடம் கூறினார். எப்போதும் நட்புடனும், அக்கரையுடனும் அவர் நடந்துகொள்கிறார். அவருக்கு எப்போதும் நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment